பை (π) யின் கதை

pie.

பை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர்.

பைக்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டா அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு டிரில்லியன்  எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த கணினிகளைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். இந்த பையின்  தசம  எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. எனவே. இதனை வேர்கொளா சிறப்பு எண்கள் என அழைப்பார்கள்.

பை (π) என்னும் எழுத்துக்கான வரலாற்றுக் காரணம்,கிரேக்கர்கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க பெரிமீட்டர்  (பரிதி) என்னும் சொல்லை ஆளுவதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்று அனைத்து மொழிகளிலும் இவ்வெழுத்தே எடுத்தாளப்பெறுகின்றது.

பையின் மதிப்பை  ஒரு வட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒழுங்கு அறுங்கோணம் அமைத்து கண்டறிந்தவர் கிரேக்க கணித அறிஞர் ஆர்க்கிமிடிஸ் ஆவார்.

பை பற்றிய பல சுவையான தகவல்களும் காணொளிக்காட்சிகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை மாணவர்களுக்கு காண்பித்து வகுப்பறையில் பையின் கதையை மாணவர்களைக்கொண்டு நாடகமாக நடித்துக்காட்டச்செய்து அவர்களின் மனத்தில் பை பற்றிய வரலாற்றை பதியச்செய்து மதிப்பிடலாம்.

9ஆம் வகுப்பு கணக்கு, விகிதமுறு எண்கள் பாடத்திற்கான செயல்பாடு.

முழுக்களை அறிவோம்

எண்களில் இயல் எண்கள், முழுஎண்கள், முழுக்கள் என்று மூன்று வகை உள்ளன என்பதை மாணவர்கள் அறிந்திருப்பார்கள். இவற்றுள் முழுக்களின் கூட்டல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச்செயல்களைச் செய்யும்போது மாணவர்களுக்கு பல சந்தேகங்கள் எழும். அதற்குக் காரணம் அவர்கள் முழுக்களின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமைதான். எனவே முழுக்களின் தன்மைகளை ஒரு எளிய விளையாட்டின்மூலம் அவர்களுக்கு உணர்த்தலாம்.
வகுப்பிலுள்ள மாணவர்களை வெளியே அழைத்து வந்து அமரச்செய்து. அவர்களுக்கு முன்னால் தரையில் ஒரு நீளமான நேர்க்கோட்டினை வரைக. கோட்டின் மையப்பகுதியில் 0 என்று குறித்துவிட்டு, ஒரு மாணவனை அழைத்து எதிரில் அமர்ந்திருகும் மாணவர்களை பார்த்தவாறு  0 உள்ள இடத்தில் நிற்கவைக்க வேண்டும். நிற்கும் மாணவனை கோட்டின் மீது வலப்பக்கம் ஒரு அடி நகர்ந்து செல்லும்படிக் கூறி வேறு ஒரு மாணவனை அழைத்து கோட்டில் நிற்கும் மாணவன்  தற்போது உள்ள இடத்தில் +1 என்று குறிக்கச் செய்யவேண்டும்.அங்கிருந்து மீண்டும் அதே திசையில் ஒரு அடி நகர்ந்து அந்த இடத்தை +2 என்க்குறிக்கச்செய்யவும். இதுபோல் தொடர்ச்சியாக அதே திசையில் ஒவ்வொரு அடியாக நகர்ச்செய்து +3, +4, +5, … என்று குறிக்கச்செய்க.
மீண்டும் பூச்சிய நிலைக்குத் திரும்பச்செய்து பூச்சியத்திலிருந்து இடப்பக்கம் ஒவ்வொரு அடியாக நகரச்செய்து -1,-2,-3,… என குறிக்கச்செய்யவும்.
பூச்சியத்திலிருந்து வலப்பக்கம் செல்லச் செல்ல எண்மதிப்பு கூடும் என்பதையும் , இடப்பக்கம் செல்லச் செல்ல எண்மதிப்பு குறையும் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். உதாரணமாக -1 ஐ விட -2 என்பது சிறியது, -2 ஐவிட -3 சிறியது என்று விளக்கலாம்.
இதன் பிறகு முழுக்களின் நான்கு அடிப்படைச்செயல்களையும் விளையாட்டு முறையில் கற்பிக்கலாம்.
கூட்டல் விளையாட்டு
ஒரு மாணவனை அழைத்து எண்கோட்டின் +8 இன் மீது நிற்கச்செய்து மற்றவர்களிடம் அவன் நிற்குமிடத்திலுள்ள எண்ணைக் குறிப்பேட்டில் குறித்திடக்கூறவும். +8 லிருந்து வலப்பக்கம் இரண்டு அடி நகரக் கூறுக. (மாண்வர்களுக்கு கோட்டின் வலப்பக்கம் நக்ர்ந்தால் + என்பதையும் இடப்பக்கம் நகர்ந்தால்
 – என்பதையும் முன்பே உணர்த்தியுள்ளதால் ) எந்த திசையில் நகர்ந்தான் எவ்வளவு தூரம் நகர்ந்தான் என்பதைக்கேட்டு அதற்குரிய எண்ணை எப்படிக்குறிப்பது என்பதற்கான பதிலை மாணவர்களிடமிருந்தே வரவழைக்கலாம். மாணவன் நகர்ந்த தூரத்தை +2 என்க்குறிக்கச் செய்யவும். இப்போது மாண்வன் நிற்கும் எண் எது எனக்கேடால் +10 என்று கூறுவர். அவர்களை அறியாமலேயே 8+2=10 என்ற கூட்டல் செயலைச் செய்துள்ளனர்.
கழித்தல் விளையாட்டு
  இப்போது கழித்தல் செய்லுக்கான விளையாட்டு தற்போது மாணவன் நிற்கும் எண்ணை +10 என்று குறிக்க வேண்டும் அவனை இடப்பக்கமாக இரண்டு அடி நகரச்செய்து நகர்ந்த தூரத்தை -2 எனக்குறிக்கலாம். அவன் தற்போது நிற்குமிடத்தை +8 என்று குறித்து 10 – 2 = 8 என்பதை உணர்த்தலாம்.
பெருக்கல் விளையாட்டு
வேறு ஒரு மாணவனை அழைத்து பூச்சியத்தில் நிற்கச்செய்து அங்கிருந்து வலப்பக்கமாக ஒரு முறைக்கு 2 அடிகள் வீதம் 3 முறை தாண்டச் சொல்லவும். ஒரு முறைக்கு எத்தனை அடிகள் என்று கேட்டு 2 அடிகள் என்பதை குறிக்கச்சொல்லவும் அதன் பக்கத்தில் பெருக்கல் குறி இட்டு எத்தனை முறை தாண்டினான் எனக்கேட்டு 3 என்று குறிக்கச்சொல்லவும் தற்போது அவன் நிற்குமிடம் எது எனக்கேட்க
 6 எனக்கூறுவர் இதன் மூலம் 2 X 3 = 6  என்பதை அறிவர். இப்போது வேறு மாணவனை அழைத்து பூச்சியத்திலிருந்து இடப்பக்கமாக ஒரு முறைக்கு 3 அடிகள் வீதம் 3 முறை தாண்டச்செய்து 3 X -3 = -9 என்பதை உணர்த்தலாம்.
இந்த விளையாட்டுகளின் மூலம் முழுக்களின் அடைப்படைச்செயல்களை எவ்வித சுமையும் இன்றி சுகமாக கணக்குகளை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் . இதுபோல் ஆசிரியர்கள் தங்களின் கற்பனைக்கேற்ற விளையாட்டுகளை உருவாக்கினால் மாணவர்களுக்கு கணக்கும் இனிக்கும்.
( ஏழாம் வகுப்பு , கணக்கு , மெய்யெண்களின் தொகுப்பு என்ற பாடத்திற்கு உரிய செயல்பாடு.)

வர்க்கமூலச் சுருள் வரைவோம்

P1050350
9ஆம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கு ஆய்வகச்செயல்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில் மேய்யெண் தொகுப்பு என்னும்  2 ஆவது இயலுக்கான ஆய்வகச்செயல்பாடாக வர்க்கமூலச் சுருள் வரைதல் என்னும் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் படத்தில் காணலாம்.
வர்க்கமூலச் சுருளை முதன்முதலாக கிரேக்க நாட்டுக் கணித அறிஞர் தியோடரஸ் என்பவர் அமைத்துக் காட்டினார். அதனால் இது தியோடரஸ் சுருள் என்றும், பித்தகார்ஸ் தேற்றத்தைப்பயன்படுத்தி அமைப்பதால் பித்தகாரஸ் சுருள் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலில் A 4 அளவுள்ள தாளை நீள வாக்கில் இரண்டாக மடிக்க வேண்டும் அந்த மடிப்பின்மீது தாளின்  வலப்புறத்தில் வலமிருந்து சுமார் 4 செ.மீ. இடைவெளி விட்டு  குறிப்பிட்ட அளவில் ( 4 செ.மீ நல்லது ) இருசமபக்க செங்கோண முக்கோணம் அமைக்கவும் செங்கோணத்தை உள்ளடக்கிய இரண்டு பக்கங்களை ஒவ்வொரு அலகாகக் கொள்ளவேண்டும். பித்தகாரஸ் தேற்றத்தின் படி செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என்பதால் இந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 2 எனக்கொள்க. இப்போது முதல் முக்கோணத்தின் கர்ணத்தை அடிப்பக்கமாகக் கொண்டு மற்றொரு செங்கோண முக்கோணத்தை அமைத்தால் அந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 3 கிடைக்கும் இதேப்போல் தொடர்ந்து ரூட் 10 வரும் வரை முக்கோணங்களை அமைத்தால் வர்க்கமூலச்சுருள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு இதனைக் கற்றுக்கொடுத்து வரையச் செய்து வண்ணம் தீட்டி அழகுபடுத்தலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வகை கணிதச்செயல்பாடுகள் எளிதாகும்.செங்கோணத்தை காகித மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.