கணக்குத்தேர்வையும் மகிழ்ச்சியாக எழுதலாம்

 

 

அன்புக்குழந்தைகளே தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் இதையும் படித்துவிடுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாகப் படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் விடைத்தாள்களே எடுத்துக்காட்டிவிடும். எனவே நன்றாகப் படிப்பதைவிடவும் தேர்வில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அது மிகச்சிறந்த கலை. அக்கலையை ஒரு சில மாணவர்களே கற்றுவைத்துள்ளனர். நீங்களும் அக்கலையைக் கற்றுக்கொண்டால் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளலாம். அதிலும் கணக்குத்தேர்வு மிக எளிதாக எழுதக்கூடியதுதான். முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடைஎழுதுவதே சிறந்த முறை. கணக்குத்தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களை பகுத்துக்கொண்டு விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம். பத்து மதிப்பெண் வினாக்களான வடிவியல் மற்றும் வரைபடம் ஆகிய வினாக்களை முதலில் எழுதி இருபது மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும். அதன் பிறகு ஐந்து மதிப்பெண் வினாக்கள் அடுத்து இரண்டு மதிப்பெண் வினாக்கள் கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான். சிலர் வினாத்தாளில் உள்ளபடி முதலில் ஒரு மதிப்பெண்ணிலிருந்து தொடங்குவார்கள். அது கடைசி நேர பதற்றத்திற்கு வித்திட்டுவிடும்.

திருத்துவோரின் கவனம் ஈர்க்க

நம் விடைத்தாளில் அடித்தல் இல்லாமல் நிதானமாக எழுதவேண்டும். கணித அடிப்படைச் செயல்களை விடைத்தாளில் அதற்கென ஒடுக்கப்பட்ட பகுதியில் செய்திடுங்கள். முற்றொருமைகள், கணித வாய்பாடுகள் ஆகியவற்றை கருப்பு நிற பேனாவால் எழுதி கவனம் ஈர்க்கலாம். விடையை கட்டம் போட்டு காட்டுவது திருத்துபவர்களுக்கு எளிதாக இருக்கும் அவர் மதிப்பெண்ணை முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வழங்குவதற்கான வழி இது. சில கணக்குகளில் படிகளை அதிகம் நீட்டிக்காமல் சுருங்க எழுதி தேவையான பகுதிகளை மட்டும் விடைத்தாளில் குறிப்பிடலாம். திருத்துபவர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருப்பதற்கான ரகசியம் இது.

கணக்கில் கவனிக்க வேண்டியவை

வடிவியலில் உதவிப்படம்அவசியம். உண்மைப்படத்தில் அனைத்து புள்ளிகளுக்கும் தவறாமல் பெயரிடுங்கள். பென்சிலை கூராக வைத்துக்கொண்டால் படங்கள் அழகாகும். நுனி மழுங்கிய அளவுகோலை தவிர்த்து புதிய அளவுகோலைப் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் அளவெடுக்கும்போது பூச்சியம் இருக்கும் பகுதி மழுங்கியிருந்தால் அளவுகளை ஒன்றிலிருந்து தொடங்கலாம். அவ்வாறு தொடங்கினால் 10 செ.மீ. அளவெடுக்க 11 செ.மீ. எடுத்தால்தான் சரியாக இருக்கும் அதனை மறந்துவிட்டால் அளவு தவறாகிவிடும். வரைபட வினாவில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப அளவுத்திட்டங்களை குறிப்பிட வேண்டும். அளவுத்திட்ட்த்தை தாளின் மேற்புறம் அவசியம் எழுத வேண்டும் அதற்கும் மதிப்பெண் உண்டு. கட்டாய வினா கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கு அவசியம் விடை எழுதுங்கள். ஒரு மதிப்பெண் வினாவில் மூன்று தகவல்களை நினைவில் கொள்ளவேண்டும். ஒன்று வினா எண், சரியான விடையைக்குறிக்கு எழுத்து, சரியான விடை இவை மூன்றையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சிலர் விடைக்குறிய எழுத்தை மட்டும் குறிப்பிடுவர். சிலர் சரியான விடையை மட்டும் குறிப்பிடுவர். அவ்வாறு இல்லாமல் மூன்றையும் குறிப்பிடுவதே சிறந்த முறையாகும்.

விடைத்தாளைக் கையாளும் முறைகள்

விடைத்தாளை அழுக்காக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கருப்பு நீலம் ஆகிய இரு வண்ன பேனாக்களை மட்டும் பயன்படுத்துங்கள். விடைகளுக்கிடையே போதிய இடைவெளி விடுங்கள். ஒரு வினாவுக்கான விடை முடியும்போது பென்சிலால் கோடிட்டு காட்டலாம். வரைபட்த்தாளை உரிய இட்த்தில் கோர்த்து கட்டுங்கள். கட்டும்போது நூலின் நுனியில் முடிச்சிடுக. அது திருத்தும்போது பக்கங்களை திருப்ப எளிதாக அமையும்.

 

பொதுவானவை

வடிவியல் பெட்டியும் அதனுள்ளிருக்கும் அனைத்து கருவிகளும் சரியாக உள்ளனவா என முதல்நாள் சோதித்துக்கொள்ளுங்கள். தேர்வறையில் மற்றவர்களிடம் கருவிகளைக்கடன் கேட்காதீர்கள். கவராயம் தளர்வாக இல்லாமலிருந்தால் மட்டுமே வட்டங்கள் வட்டவிற்கள் ஆகியவற்றை சரியாக வரைய முடியும். எனவே அதனை சோதித்து சரிசெய்யுங்கள். வடிவியல் வரைபடம் ஆகியவற்றை வரையும்போது அழிப்பானைப் பயன்படுத்தாமல் வரைக. அழித்து மீண்டும் வரைவது திருத்துபவர்களை எரிச்சலடையச்செய்யும். அதனால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலே சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொண்டு தேர்வை மகிழ்வோடு எதிர்கொண்டு எழுதிட வாழ்த்துகள்.