முழுக்களை அறிவோம்

எண்களில் இயல் எண்கள், முழுஎண்கள், முழுக்கள் என்று மூன்று வகை உள்ளன என்பதை மாணவர்கள் அறிந்திருப்பார்கள். இவற்றுள் முழுக்களின் கூட்டல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச்செயல்களைச் செய்யும்போது மாணவர்களுக்கு பல சந்தேகங்கள் எழும். அதற்குக் காரணம் அவர்கள் முழுக்களின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமைதான். எனவே முழுக்களின் தன்மைகளை ஒரு எளிய விளையாட்டின்மூலம் அவர்களுக்கு உணர்த்தலாம்.
வகுப்பிலுள்ள மாணவர்களை வெளியே அழைத்து வந்து அமரச்செய்து. அவர்களுக்கு முன்னால் தரையில் ஒரு நீளமான நேர்க்கோட்டினை வரைக. கோட்டின் மையப்பகுதியில் 0 என்று குறித்துவிட்டு, ஒரு மாணவனை அழைத்து எதிரில் அமர்ந்திருகும் மாணவர்களை பார்த்தவாறு  0 உள்ள இடத்தில் நிற்கவைக்க வேண்டும். நிற்கும் மாணவனை கோட்டின் மீது வலப்பக்கம் ஒரு அடி நகர்ந்து செல்லும்படிக் கூறி வேறு ஒரு மாணவனை அழைத்து கோட்டில் நிற்கும் மாணவன்  தற்போது உள்ள இடத்தில் +1 என்று குறிக்கச் செய்யவேண்டும்.அங்கிருந்து மீண்டும் அதே திசையில் ஒரு அடி நகர்ந்து அந்த இடத்தை +2 என்க்குறிக்கச்செய்யவும். இதுபோல் தொடர்ச்சியாக அதே திசையில் ஒவ்வொரு அடியாக நகர்ச்செய்து +3, +4, +5, … என்று குறிக்கச்செய்க.
மீண்டும் பூச்சிய நிலைக்குத் திரும்பச்செய்து பூச்சியத்திலிருந்து இடப்பக்கம் ஒவ்வொரு அடியாக நகரச்செய்து -1,-2,-3,… என குறிக்கச்செய்யவும்.
பூச்சியத்திலிருந்து வலப்பக்கம் செல்லச் செல்ல எண்மதிப்பு கூடும் என்பதையும் , இடப்பக்கம் செல்லச் செல்ல எண்மதிப்பு குறையும் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். உதாரணமாக -1 ஐ விட -2 என்பது சிறியது, -2 ஐவிட -3 சிறியது என்று விளக்கலாம்.
இதன் பிறகு முழுக்களின் நான்கு அடிப்படைச்செயல்களையும் விளையாட்டு முறையில் கற்பிக்கலாம்.
கூட்டல் விளையாட்டு
ஒரு மாணவனை அழைத்து எண்கோட்டின் +8 இன் மீது நிற்கச்செய்து மற்றவர்களிடம் அவன் நிற்குமிடத்திலுள்ள எண்ணைக் குறிப்பேட்டில் குறித்திடக்கூறவும். +8 லிருந்து வலப்பக்கம் இரண்டு அடி நகரக் கூறுக. (மாண்வர்களுக்கு கோட்டின் வலப்பக்கம் நக்ர்ந்தால் + என்பதையும் இடப்பக்கம் நகர்ந்தால்
 – என்பதையும் முன்பே உணர்த்தியுள்ளதால் ) எந்த திசையில் நகர்ந்தான் எவ்வளவு தூரம் நகர்ந்தான் என்பதைக்கேட்டு அதற்குரிய எண்ணை எப்படிக்குறிப்பது என்பதற்கான பதிலை மாணவர்களிடமிருந்தே வரவழைக்கலாம். மாணவன் நகர்ந்த தூரத்தை +2 என்க்குறிக்கச் செய்யவும். இப்போது மாண்வன் நிற்கும் எண் எது எனக்கேடால் +10 என்று கூறுவர். அவர்களை அறியாமலேயே 8+2=10 என்ற கூட்டல் செயலைச் செய்துள்ளனர்.
கழித்தல் விளையாட்டு
  இப்போது கழித்தல் செய்லுக்கான விளையாட்டு தற்போது மாணவன் நிற்கும் எண்ணை +10 என்று குறிக்க வேண்டும் அவனை இடப்பக்கமாக இரண்டு அடி நகரச்செய்து நகர்ந்த தூரத்தை -2 எனக்குறிக்கலாம். அவன் தற்போது நிற்குமிடத்தை +8 என்று குறித்து 10 – 2 = 8 என்பதை உணர்த்தலாம்.
பெருக்கல் விளையாட்டு
வேறு ஒரு மாணவனை அழைத்து பூச்சியத்தில் நிற்கச்செய்து அங்கிருந்து வலப்பக்கமாக ஒரு முறைக்கு 2 அடிகள் வீதம் 3 முறை தாண்டச் சொல்லவும். ஒரு முறைக்கு எத்தனை அடிகள் என்று கேட்டு 2 அடிகள் என்பதை குறிக்கச்சொல்லவும் அதன் பக்கத்தில் பெருக்கல் குறி இட்டு எத்தனை முறை தாண்டினான் எனக்கேட்டு 3 என்று குறிக்கச்சொல்லவும் தற்போது அவன் நிற்குமிடம் எது எனக்கேட்க
 6 எனக்கூறுவர் இதன் மூலம் 2 X 3 = 6  என்பதை அறிவர். இப்போது வேறு மாணவனை அழைத்து பூச்சியத்திலிருந்து இடப்பக்கமாக ஒரு முறைக்கு 3 அடிகள் வீதம் 3 முறை தாண்டச்செய்து 3 X -3 = -9 என்பதை உணர்த்தலாம்.
இந்த விளையாட்டுகளின் மூலம் முழுக்களின் அடைப்படைச்செயல்களை எவ்வித சுமையும் இன்றி சுகமாக கணக்குகளை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் . இதுபோல் ஆசிரியர்கள் தங்களின் கற்பனைக்கேற்ற விளையாட்டுகளை உருவாக்கினால் மாணவர்களுக்கு கணக்கும் இனிக்கும்.
( ஏழாம் வகுப்பு , கணக்கு , மெய்யெண்களின் தொகுப்பு என்ற பாடத்திற்கு உரிய செயல்பாடு.)